நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இருக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம்..!!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியமானது என நாடாளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு, சுகாதார சேவைகள் பாணிப்பாளர் நாயகத்தினால், நேற்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் முகக்கவசத்தை கழற்றவோ அல்லது கீழிறக்கவோ கூடாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் அமர்ந்திருக்க முடியுமாக இருக்கின்றபோதும், அவர்கள் அனைவரும் சபா மண்டபத்திலிருக்கும்போது தமக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் மாத்திரம் அமரவேண்டும்.

அத்துடன், சபா மண்டபத்திலிருக்கும் சகல நேரத்திலும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபா மண்டபத்திலிருக்கும் சகல அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களும், பார்வையாளர் பகுதியில் சகல தரப்பினரும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் இந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் பேனை போன்ற தனிப்பட்ட கருவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதிருப்பதுடன், கைலாகுகொடுத்தல், அரவணைத்தல் போன்ற வாழ்த்தும் முறைகளைப் பின்பற்றாதிருத்தல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சபாமண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான பகுதிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை உள்ளடக்கும் வகையிலும், போக்குவரத்துப் பிரிவு மற்றும் பராமரிப்புப் பிரிவினர் செயற்படவேண்டிய முறைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இந்த சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

Related posts