கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது நியூஸிலாந்து..!!

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்திய விவகாரத்தில் அதிருப்தி கொண்டுள்ள நியூஸிலாந்து, நட்பு நாடுகளை பின்பற்றி, நகர அரசுடன் மேற்கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ளது.

ஹொங்கொங்கில் நடைபெறக்கூடிய தேசத் துரோகம், பிரிவினைவாதம், அந்நிய சக்திகளுடன் கைகோர்த்தல் ஆகியவற்றுக்கு எதிரானதாகக் கூறி, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமொன்றை சீனா இயற்றியுள்ளது.

இந்தச் சட்டம், ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை நசுக்குவதற்காக உருவாக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், ஹொங்கொங்குடன் மேற்கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நியூஸிலாந்து நிறுத்திவைத்துள்ளது.

இதுகுறித்து நியூஸிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில், ‘சீனா அமுல்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தினால், ஹொங்கொங்கின் நிலையமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நகரின் நீதித் துறையில் சீனாவின் ஆதிக்கம் இனியும் இருக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

எனவே, அந்த நகர அரசுடன் மேற்கொண்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். எனினும், ஹொங்கொங்குடனான மற்ற உறவில் எந்த மாற்றமும் இல்லை. இராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப வர்த்தகத்தில் சீனாவுடன் எத்தகைய உறவைப் பேணுகிறதோ அதே வகையிலான உறவை ஹொங்கொங்குடனும் தொடர்ந்து பேணுவோம்’ என கூறினார்.

முன்னதாக, ஹொங்கொங்குடன் கைதிகள் பரிமாற்றம், உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகள், தங்களது ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts