உலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய வடகொரிய அதிபர்..!!

இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி வடகொரிய மக்களை மட்டுமல்ல உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் கிம் ஜாங் அன்.

கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டு வர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67-வது ஆண்டு விழா வடகொரியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கிம் ஜாங் அன், “ வடகொரியா எதிரி நாடுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. வடகொரியாவின் நம்பகமான திறன் மிக்க அணு ஆயுதங்களால் உலகில் இனி போர் நடக்காத சூழல் உருவாகியுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் எப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கிம் ஜாங் அன், இனி போர் நடக்காது என்று பேசியிருப்பது சர்வதேச வல்லுநர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை கொரியப்போர் நினைவு தினத்தையொட்டி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

அதனை பெற்றுக்கொண்ட இராணுவ அதிகாரிகள் அனைவரும் கூடி நின்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டதை கண்ட கிம் ஜாங் அன் அதனை மகிழ்ச்சியுடன் ரசித்தார்.

நீண்ட நாட்களுக்குப் பின் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

Related posts