இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு..!!

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மேலும் கூறியுள்ளதாவது, “அரச சார்பற்ற செயலகம் உட்பட பல அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பான ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணிகள் போன்றன நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  இது நாட்டை இராணுவமயப்படுத்துவதை நோக்கிய ஆபத்தான போக்காகும்.

ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசாங்கத்திலுள்ள  பலர்,  உள்நாட்டு யுத்தத்தின் போது யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள்.

சட்டத்தரணிகள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மாற்றுக்கருத்துடையவர்கள், பொலிஸார், புலனாய்வு அமைப்பினர் மற்றும் அரச ஊடகங்களினால் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தற்போது  அச்சத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. எனவே அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை மதிக்குமாறும், பாதுகாக்குமாறும்  ஐக்கிய நாடுகள் சபை  மற்றும் இலங்கைக்கு  நிதிவழங்கும் சமூகம்  வேண்டுகோள் விடுக்கவேண்டும்” என அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Related posts