லீசிங் கடன் தவணை கொடுப்பனவுக்கு மேலும் 06 மாதகாலம் சலுகை..!!

மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்துள்ள ஜனாதிபதி, பாடசாலை வேன்களுக்கு லீசிங் கடன் தவணை கொடுப்பனவுக்கு மேலும் 06 மாதகால சலுகைக்காலம் ஒன்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
நட்டஈடு வழங்கும் சிக்கல் நிலையினால் கொழும்பு தொடக்கம் குருணாகலை வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் தடைப்பட்டுள்ளன. அதற்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத்தரும் வகையில் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை விரைவு செய்யுமாறு ஜனாதிபதி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு பணிப்புரை விடுத்தார்.
குருணாகலை – மாவத்தகம பொதுச் சந்தை வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது இவ்வாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
நிதஹஸ்கம வித்தியாதீப மற்றும் தேவாபொல குமர ஆகிய பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களை புனர்நிர்மாணம் செய்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி இராணுவத் தளபதிக்கு ஆலோசனை வழங்கினார்.
மாவத்தைகம தேசிய பாடசாலைக்கு உள்ளக பெட்மிட்டன் விளையாட்டரங்கொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார்.
கஹபத்வெல துறைசார் ஊழியர்களுக்கு ‘ சேவா பியச ‘ கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதிபர் உட்பட மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதாக தொடங்கஸ்லந்த பொது நூலக விளையாட்டரங்கிற்கு வருகை தந்த ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடங்கஸ்லந்த ரிதிகம சந்தை வளாகம் வரையிலான பாதை இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் ஜனாதிபதி சுமூகமாக உரையாடினார். தொடங்கஸ்லந்த வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் காரணமாக நோயாளர்கள் குருணாகலை வரை செல்ல வேண்டியுள்ளதாக வைத்தியசாலைக்கு முன்னால் கூடியிருந்த ஊழியர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கூறினர். அது தொடர்பாக கவனத்தை செலுத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வேட்பாளர் ஆர்.டி.விமலதாச தொடங்கஸ்லந்த சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் கலந்துகொண்டார். சிறு ஏற்றுமதி பயிர்களின் விலை வீழ்ச்சியடைதல், போதைப்பொருள் பாவனை, பிரதேசத்தின் வீதிக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.
வேட்பாளர் சுமித் ராஜபக்ஷ அளவ்வை பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி, பிரதமர் கலந்துகொண்டனர்.
அளவ்வை நகரத்தின் புகையிரத கடவைக்கு மேலாக மேம்பாலம் ஒன்று நிர்மாணித்தல் உள்ளிட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தினார். தம்பதெனிய வைத்தியசாலைக்குரிய நிலத்தில் தனியார் கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் தொடர்பாகவும் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாகவும் மக்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.
ஏற்றுமதி தடைப்பட்டிருப்பதனால் சிறு கைத்தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள கஷ்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக பெயர் குறிப்பிடாது ஜனாதிபதி அலுவலகத்திற்கு தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி கூடியிருந்த மக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

Related posts