மோதல்: 6பேர் காயம்..!!

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில்  இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம்- மெனிக்பாம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் சென்றிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பகுதிக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி வேட்பாளரான ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், மஸ்தானின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் வாகனங்களை சேதமாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், தமது கிராமத்தில் அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் எவையும் ஒட்டுவதற்கு அனுமதியில்லாத நிலையில், மஸ்தானின் ஆதரவாளர்கள் கிராமத்திற்குள் சுவரொட்டிகளை ஒட்டமுனைந்த போதே இந்த முரண்பாடு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த மோதலில், பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த மோதலினால், சாளம்பைக்குளம் பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குழப்பநிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், இந்த பதற்றத்தினால் விசேட அதிரடிபடையினர் மற்றும் பொலிஸார் சாளம்பைக்குளம் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts