மூன்றாம் கட்டத்துக்கு நகரும் திட்டத்தை தாமதிக்கிறது ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்..!!

ஒன்ராறியோவில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மூன்றாம் கட்டமாகத் தளர்த்துவதற்கு பொது சுகாதார அதிகாரிகள் மேலும் சிறிது கால அவகாசம் கேட்டுள்ளதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளைத் தளா்த்தி மாகணத்தை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சில பகுப்பாய்வுகளைச் செய்ய வேண்டியுள்ளதால் இந்தக் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் ஃபோர்ட் கூறினார்.

மூன்றாம் கட்டத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் காரணிகள் தொடா்பில் வாரந்தம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை மாகாண அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் இவ்வாறான இவ்வாரத்துக்கான வாரந்த செய்தியாளா் மாநாட்டை புதன்கிழமைவரை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் ஃபோர்ட் கூறினார்.

இன்னமும் கட்டம்- 2 இல் உள்ள ரொரண்டோ, பீல், வின்ட்சர்-எசெக்ஸ் ஆகிய மூன்று பிராந்தியங்களும் அடுத்த வார இறுதி வரை மூன்றாம் கட்டத்துக்கு முன்னேற முடியாது என்பதாலே இந்தக் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சற்று அதிகமாக 195 புதிய கோவிட்-19 தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே கால அவகாசம் கோரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாகாணம் மூன்றாம் கட்டத்துக்கு நகரும் அறிவிப்பை திங்கட்கிழமை மக்கள் எங்களிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம்., ஆனால் சுகாதார அதிகாரிகளை நாங்கள் அவசரப்படுத்த முடியாது எனவும் ஃபோர்ட் கூறினார்.

புதன்கிழமை 3 -ஆம் கட்டத்துக்கு முன்னேறுவது குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவலை நாங்கள் வழங்குவோம்., மேலும் சில நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்வேன் என்று நம்புகிறேன் எனவும் அவா் குறிப்பிட்டார்.

மூன்றாம் நிலை கட்டுப்பாடு தளர்வானது பொருளாதார செயற்பாடுகளை பரந்த அளவில் மீள ஆரம்பிக்கும் திட்டங்களை உள்ளடக்கியது. மூன்றாம் கட்டத்தில் உணவகங்களில் வாடிக்கையாளா்கள் உட்புற அனுமதி, ஜிம்கள், திரை அரங்குகள் உள்ளிட்ட பல வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும் மூன்றாம் கட்டத்தில் உள்ளக இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவற்கான அனுமதி 10 இல் இருந்து 50 ஆக அதிகரிக்கப்படும். வெளிப்புற கூட்டங்களின் 100 போ் வரை ஒன்றுகூட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts