கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!!

இலங்கையில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்க எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலை நிகழ்வான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்துள்ள கனடா பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ, அது குறித்த அறிக்கை ஒன்றை தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கறுப்பு ஜூலையில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை நாங்கள் மீட்டுப் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களையும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களையும் நாம் இன்று நினைவுகூருகிறோம்.

இலங்கையில் பல தசாப்தங்களாக குழப்பம் நிலவி, பதட்டம் அதிகரித்துச் சென்ற பின்னர், 1983 ஆம் ஆண்டு ஜூலையில் கொழும்பு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, எண்ணிலடங்காதோர் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனா்.

மேலும் பல பத்தாயிரம் பேர் மரணமாகி, சமூகங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி, நீடித்திருக்கும் உடல் மற்றும் உளவியல் காயங்களை ஏற்படுத்திய 26 வருட கால ஆயுத மோதலுக்கு இந்த வன்முறை வழிவகுத்தது.

இலங்கையில் நிலவிய வன்முறையில் இருந்தும், துன்புறுத்தல்களில் இருந்தும் தப்பியோடியோரைக் கனடா இரு கரம் கொண்டு வரவேற்றது. கறுப்பு ஜூலையின் பின்னரான மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டம் ஒன்றின் மூலம் 1,800 க்கும் அதிகமான தமிழர்கள் கனடாவில் குடியேற்றப்பட்டு அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பியதுடன், கனடாவை மேம்பட்ட நாடாக மாற்றவும் உதவினார்கள்.

மிகப் பெரும் இழப்பினதும், எதிர்ப்பினதும் மத்தியில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு, கனடாவை மேலும் பலமானதாகவும், அனைவரையும் உள்வாங்கியதாகவும் மாற்றுவதற்கு உதவியது. உலகில் மிகப் பெரும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்கள் வாழும் நாடுகளில் ஒன்றாகக் கனடா இன்று விளங்குகிறது.

“கறுப்பு ஜூலையின்போதும், அதன் பின்னர் இடம்பெற்ற மோதல்களின் போதும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் கனேடிய அரசின் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீடித்திருக்கும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குப் பாதிக்கப்பட்டவர்களால் நம்பப்படும் பொறுப்புக்கூறல் நடைமுறை முக்கியமானதென்பதால், அத்தகைய நடைமுறையை உருவாக்குவதற்கு உதவியளிக்கக் கனடா தொடர்ந்தும் உறுதிகொண்டுள்ளது.

இந்த இலக்குகளை நோக்கிப் பணியாற்றும் அனைவருக்கும் நாம் எமது ஆதரவைத் தொடர்ந்து வழங்குகிறோம்.

Related posts