இந்த நாட்டை பலப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் பிரதமர்..!!

இந்த நாட்டை பலப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் மொட்டுடன் கைக்கோர்க்குமாறு நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “அனைத்து மீன்பிடி துறைமுகங்களுக்கும் புதிய தொழில்நுட்ப முறைகள் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

துறைமுகங்களின் அபிவிருத்திக்குத் தேவையான நடவடிக்கைகள் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும். மீன் தரையிறக்கங்கள், நவீன தகவல் தொடர்பு வசதிகள், பதப்படுத்தல் வசதிகள் எரிபொருள் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகள் எமது நாட்டின் அனைத்து மீன்பிடி துறைமுகங்களுக்கும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

அதுபோலவே இந்த பகுதியில் ஏராளமான வளங்கள் உள்ளன. திருகோணமலை துறைமுகம், புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் போன்று இந்த மாவட்டத்தில் மீன்வள வளமும் உள்ளது. கந்தளாய் சீனி தொழிற்சாலையை வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல தனியார் துறை முன்வந்துள்ளது.

அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் அரசாங்கத்தின் தலையீட்டுடன் தொழிற்சாலையின் பணிகளைத் ஆரம்பிப்போம்.

இந்த நாட்டை பலப்படுத்த உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் மொட்டுடன் கைக்கோர்க்குமாறு நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். நாட்டில் எந்த இனத்தைச் சேர்ந்த எவராக இருப்பினும் அவர்களுக்கு நாட்டின் எந்த பகுதிக்கும் பயணிக்க கூடிய வகையில் நாங்கள் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம்”

Related posts