அமெரிக்கா அகதிகளுக்கு பாதுகாப்பான நாடல்ல என கனடா நீதிமன்றம் தீா்ப்பு..!!


அமெரிக்கா அகதிகளுக்குப் பாதுகாப்பான நடல்ல என கனடா கூட்டாட்சி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அத்துடன் அகதிகளின் மனித உரிமைகளை அமெரிக்கா மீறுவதால் அமெரிக்காவுடன் கனடா செய்துகொண்டுள்ள புகலிடம் தொடா்பான ஒப்பந்தம் தவறானது எனவும் அந்தத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மூன்றாம் நாடுகள் ஒப்பந்தம் (STCA) 2004 முதல் நடைமுறையில் உள்ளது. அகதித் தஞ்சம் கோருவோர் தாங்கள் முதலில் செல்லும் பாதுகாப்பான நாட்டிலேயே தமக்குரிய பாதுகாப்பைக் கோர வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தம் அரசியலமைப்பிற்கு முரணானது என புதன்கிழமை கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். ஏனெனில் அமெரிக்கா புலம்பெயர்ந்தோரை சிறையில் அடைத்து அவா்களின் உரிமைகளை மீறுவதாக நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டார்.

கூட்டாட்சி நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கனேடிய குடிவரவு ஆர்வலர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

கனேடிய எல்லையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட அகதிகளுக்காக முன்னிலையான வழக்கறிஞர்கள் அகதிகள் தொடா்பான பாதுகாப்பான மூன்றாம் நாடுகள் ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தமது வாதங்களை முன்வைத்தனர். புகலிடம் கோருவோருக்கு அமெரிக்கா பாதுகாப்பானது இல்லை எனவும் வழங்கறிஞா்கள் தமது வாதத்தை அழுத்தமாக முன்வைத்தனர்.

அமெரிக்காவில் தஞ்சமடைந்து அங்கிருந்து பின்னர் கனடாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோரிய அகதிகளில் ஒருவரான நெதிரா ஜெமல் முஸ்டெபா தான் அமெரிக்காவின் தனிமைச் சிறையில் இருந்த நேரம் தனிமைப்படுத்தப்பட்டதுடன், உளவியல் ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைச் சுட்டிக்காட்டிய கனேடிய அகதிகள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மவ்ரீன் சில்காஃப், புகலிடம் கோருவோரை அமெரிக்கா நடத்தும் விதம் குறித்து நாங்கள் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் என்பது அகதிகளின் உரிமைகோரல்களை சிறப்பாக நிர்வகிப்பதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் புகலிடம் கோருவதைத் தவிர்க்கும் நோக்கிலும் செயற்படுத்தப்பட்ட கொள்கையாகும்.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற 2017-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அகதிகள் உள்ளிட்ட அனைத்துக் குடியேற்றங்களையும் அனுமதிக்க மறுத்து வருகிறார் . அமெரிக்காவின் அகதிகள் தொடர்பான இறுக்கமான கொள்கைகளால் சுமார் 58,000 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு வந்த அகதிகள் , எஸ்.டி.சி.ஏ. ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என கனடா தெரிவித்துள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தம் கனடாவின் உரிமைகள் சாசனத்தின் ஒரு பகுதியை மீறுவதாக மத்திய நீதிமன்ற நீதிபதி ஆன் மேரி மெக்டொனால்ட் தீர்ப்பளித்தார். கனடாவின் உரிமைகள் சாசனம் ஒருவரின் வாழும் உரிமை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசாங்கம் தலையிடுவதைத் தடைசெய்கிறது.

எஸ்.டி.சி.ஏ. ஒப்பந்தத்தின் பிரகாரம் அகதிகள் அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் அமெரிக்க அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது எனது முடிவு என நீதிபதி மெக்டொனால்ட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஆனால் கனடாவின் பாராளுமன்றம் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் ஆகியன இந்தத் தீா்ப்புக் குறித்துப் பதிலளிக்கவும் மேன் முறையீடு செய்ய விரும்பின் அதற்கு ஏதுவாக ஆறு மாதங்கள் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுவதை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த தீர்ப்புக் குறித்து அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் இதுவரை எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளை, கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்தத் தீா்ப்புக் குறித்து அறிந்துள்ளதாகவும், தற்போது அது குறித்துப் மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts