ராஜபக்சக்கள் கொலையாளிகள் பிரேமதாஸக்கள் கொடையாளிகள் சஜித் தெரிவிப்பு..!!

“ராஜபக்சக்கள் கொலையாளிகள்; ஆனால், பிரேமதாஸக்கள் கொடையாளிகள். ராஜபக்சக்கள் ஏமாற்றுக்காரர்கள்; ஆனால், பிரேமதாஸக்கள் சொல்வதையே செய்பவர்கள். இதை நாட்டு மக்கள் நன்கு அறிந்தவர்கள்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அப்புதளை நகர சபையில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- “சர்வாதிகாரத்துக்கும் அராஜகங்களுக்கும் கடத்தல்களுக்கும் படுகொலைகளுக்கும் ஊழல், மோசடிகளுக்கும் பெயர்போன ராஜபக்சக்களை நாட்டு மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை.

பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸால் நாடு பாதிப்படைந்துள்ளது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப ராஜபக்ச அரசிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை. வாழ்வாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கி வரும் நாட்டு மக்களுக்கு மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா பணத்தை நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தவுடன் என்ன செய்வது என்று அறியாது ஆளும் தரப்பினர் எம்மை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

எம் மீது சேறுபூசி வரும் ‘மொட்டு’ கட்சியினருக்கும், அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கி வரும் நபர்களுக்கும் மற்றும் ‘டீல்’ காரர்களுக்கும் நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். நாங்கள் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாப் பணத்தைப் பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்ததைப் போன்று எமது ஆட்சியில் அதனைக் கட்டாயம் பெற்றுக்கொடுப்போம். அதற்கான ஏற்பாடுகள் எம்மிடம் இருக்கின்றன. எமது கட்சியின் சிறந்த திறமைமிக்க குழுவினர் அதனைக் கண்டறிந்துள்ளனர்.

பாதிப்படைந்துள்ள மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது என்று தெரியாமல் இருக்கும் அரசுக்கு நாங்கள் எடுத்திருக்கும் தீர்மானங்கள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ‘மொட்டு’ கட்சியினரும் அவர்களுடன் ‘டீல்’ செய்துகொண்டுள்ளவர்களும் செய்வதறியாது தடுமாறி வருகின்றனர்.

பிரேமதாஸக்கள் எப்போதுமே சொல்வதை செய்பவர்கள் என்பதை முழு நாட்டு மக்களுமே அறிந்துகொண்டுள்ளனர். இதேபோன்று பெருந்தோட்ட மக்களிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். எனது தந்தையான ரணசிங்க பிரமதாஸவை நீங்கள் நம்பிச் செயற்பட்டதைப் போன்று என் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொடுப்பதாக நான் வாக்குறுதி வழங்கியது போன்று அதனைப் பெற்றுக் கொடுப்பேன். ஆட்சியமைத்து 24 மணித்தியாலங்களுக்குள் எரிபொருள் விலையைக் குறைப்பேன்.

தேர்தல் மேடையில் நான் வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியே தீருவேன். ஜனாதிபதித் தேர்தலில் போலியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த கொலைகாரக் கூட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு விரட்டியடிக்க வேண்டும்” – என்றார்.

Related posts