கருணாவால் புலிகள் தோற்கவில்லை! பொன்சேகா..!!

கருணா பிரிந்ததாலேயே விடுதலைபுலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்ததாக கூறுவதும் தவறு என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கருணா அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் விடுதலைப்புலிகள் கைப்பற்றியதால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததாலேயே புலிகளை பலவீனப்படுத்தி போரை வெல்ல முடிந்ததாக பொதுஜன பெரமுன கட்சியினர் கூறு வருகின்ற நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் “கருணா வெளியேறினார் என்பதால் புலிகள் அமைப்பு இரண்டாக பிளவுபடவுமில்லை. பலவீனமடையவுமில்லை. இரண்டு வாரங்கள் மட்டுமே கிழக்கை கருணா கைப்பற்றி வைத்திருந்தார். எனினும் கிழக்கை மீட்க உடனடியாக பிரபாகரன் தாக்குதல் அணி ஒன்றை அனுப்பியிருந்தார்.

வாழைச்சேனை பகுதியில் உள்ள கஜூவத்தை பகுதியில் கடல் வழியாக வந்த புலிகளின் தாக்குதல் படையணி, தாக்குதல் நடத்தி கருணாவின் உறுப்பினர்களை கொன்றதால் இந்த தாக்குதலால் கருணாவுக்கு நடுக்கம் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்குள் தம்முடன் இருந்த பெண் போராளிகள், சிறுவர் போராளிகள் ஆகியோரை ஆயுதங்களைப் போட்டுவிட்டு வீடுகளுக்கு தப்பிச் செல்லுமாறு கூறியதுடன், சுங்காவில் பகுதியிலுள்ள பிள்ளையானின் முகாமில் கருணா தஞ்சமடைந்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் அங்கிருந்தும் கொழும்புக்கு கருணா ஓடிவந்தார். அதன்பின்னர் புலிகளின் மற்றொரு தளபதியான ரமேஷ் என்பவர் வீடுகளுக்கு சென்ற போராளிகளை ஒன்றிணைத்து இரண்டு மூன்று வாரங்களுக்குள் கிழக்கில் புலிகளின் பலத்தை நிலை நிறுத்தியதாகவும் கூறிய பொன்சேகா ,எனவே கருணாவின் பிரிவால் கிழக்கில் புலிகளின் பலம் குறையவில்லை என்றும் அவ்வாறு கூறுவது தவறு எனவும் தெரிவித்தார்.

Related posts