கருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி நிராகரிப்பு..!!

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூருத்தி முரளிதரனை (கருணா அம்மான்) கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணை இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரினால் குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நிராகரிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், யுத்த காலத்தில் ஆனையிறவு களமுனையில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் படையினரை தான் கொன்றதாக கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறிருக்கையில், கருணாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் அவரைக் கைதுசெய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு, கடுவெல நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts