இன்றுடன் நிறைவடையவுள்ள அஞ்சல் மூல வாக்களிப்பு..!!

எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் அஞ்சல்மூல வாக்களிப்பினை அளிக்க முடியாதவர்களுக்கு இன்றைய தினம் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான அஞ்சல்மூல வாக்களிப்பிற்காக 7 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அத்துடன் ராஜாங்கனை பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட ராஜாங்கனை பிரதேச செயலக அதிகார பகுதியின் அஞ்சல்மூல வாக்களிப்பிற்கான தினம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத ஸ்தலங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடமும் கோரியுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தலுக்காக குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறு மத ஸ்தலங்களை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 79 சரத்தின் கீழ் மத ஸ்தலங்களில் இடம்பெறும் பிரசார நடவடிக்கை அல்லது மதம் சார்பான கூட்டங்களில் கட்சி, சுயேட்சை குழுக்கள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அல்லது பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து வெளியிடுவது குற்றமாகும்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்குமறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து தேரர்கள் மற்றும் மத குருமார்களிடமும் கோரியுள்ளது.

இதேவேளை, தனது மகனை ஒருபோதும் அரசியல் வாரிசாக மாற்றப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் நுவரெலிய மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

லிந்துலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் வெளியாகும் பெறுபேறுகளை பொருத்து பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியையே ஆதரித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் வேட்பாளருமான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் பல்வேறுப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

ஆட்சியமைக்கின்ற எந்த தரப்பாக இருந்தாலும் தமிழ் மக்களின் உணர்வுகளை சிதறடிக்கும் பணியிலே ஈடுபடுவதாக வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பி.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

Related posts