இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்கர்கள் போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன்பாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ், தென்சீன கடல் எல்லை, வர்த்தகப்போர் என பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் நிலவி வருகிறது.

இதனால், சீன அரசை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கமைய இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்கர்கள் இன்று வொஷிங்டனில் உள்ள சீன தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் கொரோனா வைரஸ், அமெரிக்காவுடனான வர்த்தகபோர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீனாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சீன தூதரகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. வைரஸ் காரணமாக அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா கடுமையான கோபத்தில் உள்ளது. மேலும் தென் சீன கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அந்த கடற்பரப்பில் அமைந்துள்ள அண்டை நாடுகள் மிகுந்த கலக்கத்தில் உள்ளன. இதற்கிடையில், தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தென் சீன கடல் பரப்பில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts