600க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து..!!

சீனாவின் தூர மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் (Urumqi), நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உரும்கி திவோபு சர்வதேச விமான நிலையத்தில் 600க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்களை இரத்து செய்ய வழிவகுத்துள்ளன.

இது ஒரு நாளின் மொத்தத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகம் என விமான தரவு நிறுவனமான வெரிஃப்லைட்டின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

24 வயது பெண் ஒருவருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

இவ்வாறு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாவது, சுமார் ஐந்து மாதங்களில் புதிய தொற்று பற்றிய கவலையைத் தூண்டியுள்ளது.

இன்று முதல், ஜுன்யாவோ எயார்லைன்ஸ் மற்றும் ஷென்சென் டோங்காய் எயார்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் ஏழு நாட்களுக்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை நியூக்ளிக் அமில சோதனையைக் காட்ட பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் ஏற்கனவே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.

கொவிட்-19 அச்சுறுத்தலின் பின்னர், நேற்று பிற்பகுதியில் உரும்கி நகரின் சுரங்கப்பாதை சேவையான மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டன.

சீனாவில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிததாக 10 வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 9பேர் வெளிநாட்டு பயணிகள் என நாட்டின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் புதிய தொற்று பரவலுக்கு இலக்கான பெய்ஜிங்கில், தொடர்ந்து 11ஆவது நாளாக புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts