ரோந்து பணிகள் நிறுத்தம்..!!

லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினர், தங்கள் நிலைகளில் இருந்து 600 மீட்டர் பின்வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையில் இரு தரப்பு வீரர்களும் மிக அருகருகே நிற்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது.

இதேநேரம் கல்வான், கோக்ரா உள்ளிட்ட இடங்களில் இரு தரப்பும், தற்காலிகமாக ரோந்து பணிகளை ஒத்தி வைத்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீர் அருகேயுள்ள லடாக் பகுதியில் இந்திய – சீன எல்லையில் அண்மையில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம்  நிலவியது.

இதனையடுத்து, இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பதற்றத்தை தவிர்க்க இரு தரப்பும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து மீளப்பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, லடாக் அருகில் சீன வீரர்களும் இந்திய வீரர்களும் தங்கள் நிலைகளில் இருந்து 1.5 கி.மீ. பின்வாங்கிச் சென்றதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், இரு தரப்பும் லடாக் பகுதியிலிருந்து, 600 மீட்டர் வரை மட்டுமே பின்வாங்கிச் சென்றதாக  இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts