சுகாதார பாதுகாப்போடு பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி

பொது மக்களுக்கான சுகாதார பாதுகாப்போடு, பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அஜித் ரோஹன மேலும் கூறியுள்ளதாவது, “சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவே நாம் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளோம்.வவுனியாவுக்கும் செல்ல நாம் தீர்மானித்துள்ளோம்.

தற்போது நாம் கொரோனா சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறோம். இது நாடளாவிய ரீதியான ஒரு தேசியப் பிரச்சினையாகத்தான் காணப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனம் என்று இந்த வைரஸ் தொற்று இல்லை எனக் கூறுகிறதோ, அதுவரை இதன் தாக்கத்திற்கு நாம் முகம் கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலைக் காணப்படுகிறது.

இந்த நிலையில், எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது குறித்து நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம்.

அதாவது தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி எதிர்வரும் தேர்தலை நடத்தவே நாங்கள் முயற்சிக்கின்றோம்

அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே, சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் தேர்தல் வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அந்த நபருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை எடுக்க பொலிஸார் தயாராகவே உள்ளனர் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts