சீனாவில் வைரஸ் தோற்றம் குறித்த WHO விசாரணைக்கு..!!

கொரோனா வைரஸ் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் எடுத்த தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் ஆண்ட்ரூ ப்ரெம்பெர்க், வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகள் விஞ்ஞான ரீதியாக இருக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே பொறுப்பு கூற வேண்டுமென அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. உலக சுகாதார ஸ்தாபனமும் சீனாவுக்கு ஆதரவாகவே செயற்படுவதாக அமெரிக்கா கடந்த காலங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

சீனாவின் வூஹானில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளில் வேகமாக பரவியதுடன் குறித்த வைரஸ் காரணமாக இதுவரை 1 கோடியே 26 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு உலகில் ஐந்து இலட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த வைரஸ் உருவானது குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் சீனாவுடன் உலக சுகாதார ஸ்தாபனம் சேர்ந்து கொண்டு கொடிய வைரஸை பரப்பியதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சுமத்தி, அந்த அமைப்புக்கு வழங்கிய நிதியை நிறுத்தியதுடன் அமைப்பிலிருந்து முறைப்படியும் வெளியேறியது.

தொடர்ந்தும் கொரோனா வைரஸ் உருவானது குறித்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் உலக சுகாதார சபையில் உலக நாடுகள் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு நேற்று, பீஜிங் சென்றிருந்ததுடன் அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் உருவானது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே வைரஸ் குறித்தான விசாரணைக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புதல் வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related posts