திருக்கோணேஸ்வரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது..!!

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயம் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்பொருள் ஆய்வு நடத்தவேண்டிய 2 ஆயிரம் இடங்கள் உள்ளன.

வனப்பகுதிகளிலும் தொல்பொருள்கள் உள்ளன. இவை தேசிய மரபுரிமைகளாகும். அனைத்து விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். எனவே, செயலணியின் பணி எப்போது முடிவடையும் என்று உறுதியாக கூறமுடியாது.

ஆனால், கூடியவிரைவில் செய்துமுடிக்குமாறே குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்பொருள் என்பதை தேசிய மரபுரிமையாகக் கருதி அனைவரும் பாதுகாக்கவேண்டும்.

குறிப்பாக பொலனறுவையிலுள்ள சிவன்கோயில் எமக்குரியது அல்லாவிட்டாலும் அதனை நாம் பாதுகாக்கின்றோம். கோணேஸ்வரம் கோயில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது.

இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்டமாட்டோம். ஆனால், அப்பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும். இதனைச் செய்தாலே போதும்.

எமது செயலணி தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளால் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts