சீனா அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடும் விசா கட்டுப்பாடுகள்..!!

சீனாவின் முக்கிய அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விசா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் மற்றும் அந்நாட்டு இராஜதந்திரிகள் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் செல்ல சீன அரசு தடை விதித்துவருகிறது.

இந்நிலையில் அதற்குப் பதிலடியாக கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் திகதி திபெத் அணுகல் சட்டத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. அதில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டாா்.

இந்தச் சட்டப்படி திபெத்துக்குள் அமெரிக்க மக்களை அனுமதிக்க மறுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சீனாவின் முக்கிய அதிகாரிகளுக்கும் விசா வழங்குவதில் அமெரிக்காவும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதை அமெரிக்கா தீவிரமாக நடைமுறைப்படுத்தவில்லை. சீனாவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், திபெத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தடையின்றி அமெரிக்காவுக்குள் சென்று வருகின்றனா்.

இந்நிலையில் திபெத் அணுகல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் சீனாவைச் சோ்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கும், சீன கம்யூனிஸ்ட் அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கட்டுப்பாடு்களை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் வசிக்கும் திபெத்திய மக்களின் நலனுக்காகவும், திபெத்தின் பொருளாதார மேம்பாடு, சூற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை தடுக்கவும் அமெரிக்கா தொடர்ந்து பங்களிப்பு செய்யும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

திபெத்திய மக்களுக்கு நியாயமான முறையில் சுயாட்சி கிடைக்க ஆதரவளிப்போம். அவர்களின் அடிப்படை உரிமைகள், மறுக்க முடியாத மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்போம். அந்த மக்களின் தனிப்பட்ட மதவழிபாடுகள், கலாச்சாரம், மொழி ஆகியவற்றையும் பாதுகாப்போம். அமெரிக்க மக்கள் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் திபெத்திய பகுதிகளிலும் செல்ல தொடர்ந்து உழைப்போம் எனவும் இது குறித்து மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts