சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கை நிராகரித்தது நீதிமன்று..!!

யாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர் தேவாலத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றமை, சென்பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக 150 இற்கும் அதிகமானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளமை போன்ற தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்து மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அதேவேளை அவரை அங்கு செல்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்நிலையில் இன்று நண்பகல் சட்டத்தரணி சிறீகாந்தாவுடன் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

அங்கு சிவாஜிலிங்கம் மீதான குற்றச்சாட்டு திட்டமிட்டு புனையப்பட்டது என்று சட்டத்தரணி வாதாடினார், இதன் போது சிவாஜிலிங்கம் தொடர்பில் தமக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்தது என்றும் அவர் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவித்ததாகவும் பொலிஸ் தரப்பினர் நீதிமன்றில் தெரிவித்திருக்கின்றனர்.

இதனை சிவாஜிலிங்கம் தரப்பு சட்டத்தரணி முற்றாக நிராகரித்ததுடன், வழிபடுதல் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதனை அடுத்து,

பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி,

சிவாஜிலிங்கம் வழிபாட்டில் ஈடுபடுவது அவருடைய தனிப்பட்ட உரிமை என்று தெரிவித்து தடை செய்யும் கோரிக்கையை நிராகரித்ததுடன், பொலிஸார் குறிப்பிட்டது போன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டு சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த போது விமானக் குண்டுத் தாக்குதலில் 150 பேர் வரையில் கொல்லப்பட்ட நினைவு நாள் நாளை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts