எய்ட்ஸ் நோயாளிகளின் உயிா் காப்பு மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு..!!


கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக மூன்றில் ஒரு உலக நாடுகள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உயிா் காப்பு மருந்துகளைப் பெற முடியாத நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

73 நாடுகள் தங்களிடம் உயிா்காக்கும் எய்ட்ஸ் மருந்துகளின் இருப்பு ஆபத்தான அளவுக்கு மிகவும் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளன. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 24 நாடுகளில் மட்டும் சுமாா் 83 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இத்தகைய மருந்துகளை நம்பி உயிா் வாழ்ந்து வருகின்றனா் எனவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளால் மருந்து விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதே இந்ந நிலைக்குக் காரணம் எனவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் கொரோனா நெருக்கடியால் எந்தெந்த நாடுகளில் எய்ட்ஸ் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எற்பட்டுள்ளது? என்ற விவரத்தை அது வெளியிடவில்லை.

இந்நிலையில் எய்ட்ஸ் நோயாளிகளின் உயிர்காக்கும் மிகவும் அத்தியாவசியமான மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை மிகவும் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

உயிா்க்கொல்லி நோயான எய்ட்ஸுக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடி இதுவரை நாம் பெற்றுள்ள வெற்றிகள் அனைத்தையும் கொரோனா தொற்று நோய் சீரழிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் அவா் கூறினார்.

எச்.ஐ.வி. வைரஸால் உருவாகும் எய்ட்ஸ் நோய்க்கும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் அதன் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தி நோயாளிகளின் ஆயுளை நீடிப்பதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts