நடக்கும் பல விடயங்கள் தந்தைக்கு தெரியாது – யோஷித்த ராஜபக்ச

வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசோக பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படாமை குறித்து தனது தந்தைக்கு தெரியாது என யோசித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நடக்கும் பல விடயங்கள் தனது தந்தைக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச சார்பில் குருணாகல் மாவட்டத்தில் நடைபெற்ற சில கூட்டங்களில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிய தான் வந்துள்ளதாக யோஷித்த ராஜபக்ச கூறியுள்ளார். அப்போது அசோக பிரேமதாசவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது அநீதியானது என அங்கிருந்த சிலர் யோஷித்தவிடம் கூறியுள்ளனர்.

அதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பசில் ராஜபக்ச வாக்குறுதியளித்திருந்தாக அசோக பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவே தலைமை வேட்பாளர். பிரதமர் மகிந்த ராஜபக்சவும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனக்கு நெருக்கமான பலரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts