ஆயுதம் தாங்கியவர்களுக்கு வாக்களிப்பதானது உங்களுக்கு ஆபத்தான நிலையினை ஏற்படுத்தும்

இன்று காணப்படும் ஜனநாயக சூழல் சர்வாதிகார போக்கிற்கு செல்லும் நிலை காணப்படுவதனால் முன்னர் ஆயுதம் தாங்கியவர்களுக்கு வாக்களிப்பதானது உங்களுக்கு ஆபத்தான நிலையினை ஏற்படுத்தும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டமும் தேர்தல் பரப்புரை அலுவலக திற்பு விழாவும் இன்று மாலை கிரான்குளத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைமை வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஆயுதக்குழுக்களுக்கும் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடிந்த வீட்டுக்கும் வாக்களிப்பதை மக்கள் தவிர்த்து தமது கட்சியினருக்கு வாக்களிப்புமாறும் அவர் கேட்;டுக்கொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன்¸

நான் மட்டக்களப்பிற்கு புதியவனல்ல.1978ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக இருந்தவன் ஆவேன்.அந்த காலகட்டத்தில் இரண்டு தமிழ்ப் போராளிகள் நெடுங்காலமாக அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அந்த சமயம் நான் அங்கு வந்தபோது அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்று அரசியல் ரீதியாக பலரும் வந்து எனக்குக் கூறினார்கள். நான் முதன்முதலாக மட்டக்களப்பிற்கு தான் நீதிபதியாக வந்துள்ளேன்¸சட்டத்தின்படி நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர்களிடம் கூறினேன். இரண்டு போராளிகளும் எந்த விதமான வழக்குகளும் அவர்களுக்கு எதிராக பதியப்படாமல் சுமார் ஒன்றரை வருடங்களாக சிறையில் இருந்தார்கள்.நான் அரச சட்டத்தரணிக்கு மூன்று வாரங்கள் அவகாசம் கொடுத்து உடன் அவர்களுக்கு எதிரான வழக்கை பதிவு செய்யுங்கள் அல்லது அவர்களுக்கு பிணை வழங்குங்கள் என்று கூறினேன். மூன்று வாரங்கள் கழிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக வழங்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நான் அவர்களுக்கு பிணையளித்தேன். அவர்களுக்கு பிணை வழங்கியதன் காரணமாக என்னை மட்டக்களப்பிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக மாற்றிவிட்டார்கள். இவற்றுக்கு காரணம் அரசியலாகும். சிறையிலிருந்த அந்த இருவரில் ஒருவர் மாவை சேனாதிராஜா¸மற்றையவர் காசி ஆனந்தன் ஆவார்.

இவ்வாறான அரசியல் ரீதியான விடயங்கள் நீதித்துறையை பலவாறாக பாதித்த காலம் இருந்தது¸தற்போதும் இருக்கின்றது. நான் இங்கு வந்தபோது அரசியல் ரீதியாக பலருடன் பேசியபோது அதிகமானாவர்கள் முஸ்லிம் சகோதரர்கள் பற்றி பலவிதமாக கருத்துகளை பேசியிருந்தனர்.அவர்களுக்கு எதிராக குறைகளை முன்வைத்திருந்தார்கள். இலங்கை மின்சாரசபை¸ நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை¸வைத்தியசாலை போன்ற ஒவ்வொரு இடங்களிலும் முஸ்லிம் சகோதரர்களே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்¸தமிழ் மக்களை அலட்சியம் செய்துவிட்டனர் என இவ்வாறான நிலை ஏற்பட்டதற்கு முஸ்லிம்களை குறை கூறுகின்றனர்.

நீங்கள் குறை கூறவேண்டியவர்கள் முஸ்லிம்களா அல்லது தமிழ் தலைமைகளா என நான் உங்களிடம் கேட்கின்றேன். கிழக்கு மாகாணசபையில் பதினொரு ஆசனங்கள் எங்களுக்கு கிடைத்தன. முஸ்லிம் காங்கிரசிற்கு 7ஆசனங்கள் கிடைத்தன. அந்த பதினொரு உறுப்பினர்களையும் கொண்டு ஏன் எங்களால் ஒரு தமிழ் முதலமைச்சரை நியமிக்க முடியாமல் போனது?

முஸ்லிம்களுக்கு நன்மை செய்கின்றோம் என்று இரண்டு இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் முதலமைச்சரை கொண்டு வந்தார். அப்படி செய்துவிட்டு இப்போது தமிழ் மக்களை உதாசீனம் செய்கின்றார்கள் என்று கூறுவதில் பயனில்லை. பிழை எங்களுடையதாகும். எங்களுக்கு கிடைத்த வாக்குகளை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்தி தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமித்திருந்தோமானால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

கடந்த ஐந்து வருடகாலமாக தமிழ் மக்கள் பல்வேறுவிதமான சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டி இருந்ததற்கு காரணம் எங்களுடைய தலைமைத்துவம் சரியாக அமையவில்லை என்பதாகும். அவர்கள் பல் இளித்து அவர்களிடமிருந்து பலன் பெறலாம் என்ற நிலையில் இருந்தார்கள். இணை அரசாங்கமென்று அரசாங்கத்துடன் சேர்ந்து அதை தருவார்கள்¸ இதை தருவார்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார்கள். 2016ல் தீர்வு வரும் என்றார்கள்¸ 2017ல் அதையே கூறினார்கள்¸2018¸2019ல் தீர்வு வந்துவிட்டது என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ஆகவே நாங்கள் அவர்களுடன் சிரித்து பழகினால் அவர்களிடமிருந்து எதையாவது பெற்றுவிடலாம் என்ற சிந்தனையை அரசியலில் வைத்திருக்கக்கூடாது.தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் பரஸ்பரம் நம்பிக்கையுடன் நடந்துகொள்ள முடியும்.

நூறு வருடகாலமாக திட்டமிட்டு சிறுபான்மையை ஒதுக்கிய ஒரு பெரும்பான்மையினர் இதுவரை காலமும் தாங்கள் செய்து வந்த அந்த காரியங்களிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இதனை நாங்கள் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். நாங்கள் செய்த பிழையால் எங்களுக்கு முஸ்லிம் சகோதரர்களுடன் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றது. இவற்றை களைவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் நாங்கள் முஸ்லிம் சகோதரர்களுடன் நம்பிக்கையுடன் பேசி மிகவும் கடுமையாக எங்களுடைய உரிமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்து இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.

முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள் தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடமுடியும் என்று பலர் கூறுகின்றனர்.தயவு செய்து அந்த எண்ணத்தலிருந்து விடுபடுங்கள். ஆயுதம் ஏந்தியவர்கள் முன்னொரு காலத்தில் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள். அவர்களுக்கு எடுக்கக்கூடியதாக இருந்திருக்கும்.

இன்று ஜனநாயக சூழலானது சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக தெரிகின்றது.சர்வாதிகாரிகளுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருபவர்கள் நாளை வென்றார்களானால் சர்வாதிகார பின்னணியிலே இவர்களுடைய ஆயுதம் முன்னணியிலே அதை வைத்துக்கொண்டு உங்களை ஆட்டம் காட்டி விடுவார்கள். எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையிலே ஜனநாயகம் என்பது எங்களை விட்டு தூரச்சென்றுவிடும். அதனால் முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கு வாக்களிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

பெரும்பான்மை தேசிய கட்சிகள் சார்பில் இங்கு போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்.அவர்கள் கூறுவதையே அவர்கள் செய்ய வேண்டும். அரசாங்கம் எதை சொல்கின்றதோ அதனை செய்துகொண்டு தாங்கள் செய்ய நினைத்ததை தமிழ் மக்களுக்கு செய்ய முடியாத நிலையில்தான் இருப்பார்கள். பெரும்பான்மை சமூகத்திற்கு சிறுபான்மையினரை அடக்கி ஆளவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும்போது அந்த வேட்பாளர்களை தங்கள் கைப்பொம்மைகளாக மாற்றி ஆட்டிக்கொண்டிருப்பார்களே தவிர அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்ய நினைக்கும் பலவிதமாக விடயங்களை தடை செய்துவிடுவார்கள். அதில் ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவார்கள். சிலவேளைகளில் நன்மைகளை பெறக்கூடியநிலை வந்தால்கூட ஓரளவிற்கு தான் அந்த நன்மைகளை பெறமுடியும்.

கட்டுப்பாடு தேசியக் கட்சிகளுக்கு இருக்கும்வரை அவர்களுடைய வேட்பாளர்களுக்கு எதையுமே செய்ய முடியாத நிலையிருக்கும். ஆயுதக் குழுக்களுக்கு வாக்களிக்காதீர்கள்¸ தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள். எங்களுக்கு அடுத்து இருப்பது பலகாலமாக நீங்கள் வாக்களித்து வந்த வீடாகும். நீங்களும் நானும் பலகாலமாக வீட்டிற்கு தான் வாக்களித்து வந்தோம். ஆனால் இப்போது வீடு பயனற்றுப்போய்விட்டது. உக்கிப்போய் பாம்புகள் எல்லாம் உள்;நுழைந்துவிட்டது. அவ்வாறானதொரு வீட்டைத்தான் நாங்கள் இப்போது பார்க்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எடுத்த பிழையான தீர்மானங்களால் தான் இன்று நாங்கள் இவ்வளவு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது. வீட்டிற்கு வாக்களித்தவர்கள் இனியாவது வீட்டிலிருந்து விடுபட்டு எங்களுடைய மீன்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் எல்லோரையும் சேர்த்து செல்லும் முழுமையானதொரு சிந்தனையுடன் எங்களுடைய கட்சி வேலை செய்ய இருக்கின்றது. இதுவரை காலமும் அரசியல் தீர்விற்கு முதல் பொருளாதாரத்தைப் பற்றி பார்க்க வேண்டு; என்று பேசிக்கொண்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் முதலிலே அரசியல் தீர்வு அதன் பின்னர் பொருளாதாரம் என்று கூறியிருக்கின்றனர். இது காலத்திற்கு காலம் எண்ணங்கலௌ;ளாம் மாறிக்கொண்டிருக்கின்றது.

அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக நாங்கள் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.தன்னாட்சி ரீதியான அரசியல் ரீதியான தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் பாராளுமன்றம் சென்று அதனை செய்வோம்.

சிங்களவர்கள் எங்களுக்கு தீர்வு தருவதாக கூறினாலும் தரமாட்டார்கள்.நாங்கள் சர்வதேசத்துடன் இணைந்து வடகிழக்கு மக்களிடம் உங்களுக்கான தீர்வு எதுவாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கேட்போம்.ஐநாவின் கண்காணிப்பில் வடகிழக்கு மக்களுக்கு எவ்வாறான தீர்வு வேண்டும் என்பதை அறிந்து அது தொடர்பான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.

வருங்காலத்தில் எங்களிடம் நிபந்தனையற்ற ஆதரவு இருக்காது.எந்தக்காலத்தில் எதனைச்செய்யும்போது நிபந்தனையுடனேயே நாங்கள் ஆதரவினை வழங்குவோம்

Related posts