மியன்மாரின் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண் சரிவில் 162 பேர் பலி..!!

மியன்மாரின் வடக்கு பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண் சரிவில் 162 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவுகின்ற மழையுடனான வானிலை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தீயணைப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளமையை அடுத்து அங்கு தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சுரங்க பணிகளை இடைநிறுத்துமாறு நேற்று முன்தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அது மீறப்பட்டுள்ளதாக மியன்மாரின் கச்சின் மாநிலத்தின் உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நேற்றிரவு குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இதன்போது காயமடைந்துள்ள 53 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மியன்மாரில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஒருவருக்கு மாத்திரம் கொவிட-19 தொற்றுறுதியாகியுள்ளது. இந்தநிலையில் மியன்மாரில் கொவிட்-19 தொற்றுறுதியான 304 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை தற்போது பிரேஷிலில் கொவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 277 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த காலப்பகுதியில் 47 ஆயிரத்து 984 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அதிகமாக கொவிட்-19 தொற்றுதியான நாடுகளின் பட்டியலில் பிரேஷில் இரண்டாம் இடத்திலுள்ளது. இதற்கமைய பிரேஷிலில் இதுவரையில் 61 ஆயிரத்து 990 பேர் உயிரிழந்துள்ளதோடு 15 லட்சத்து ஆயிரத்து 353 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 70 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான 61 லட்சத்து 31 ஆயிரத்து 423 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts