தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முழுமையாக ஆதரித்து..!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முழுமையாக ஆதரித்து வடக்கு கிழக்கிலே 20 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக அர்ப்பணிப்புடன்¸ முழுமூச்சாக உழைப்பதே ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முழுமையான நிலைப்பாடு என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்¸

தற்போது பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள்¸ அரசியல் நகர்வுகள் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு சொல்பவர்கள் யார் என்று பார்த்தால் தேசியக் கட்சிகளின் முகவர்களாகவும்¸ தரகர்களாகவும் செயற்படுபவர்களே அவ்வாறு சொல்லுகின்றார்கள். அவர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உடன்பாடு இல்லை என்றால் வெளியில் சென்ற எல்லோரும் ஒருமித்து ஒரு கட்சியாக மாறியிருக்க வேண்டும். ஆனால் பெட்டிக்கடை போடுவது போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியை உருவாக்கிக் கொண்டு வியாக்கியானம் பேசுகின்றார்கள். இவ்வாறு பேசுவதால் தமிழர்களின் அபிலாசைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.

சரி பிழை என்பதற்கு அப்பால் எமது பலத்தை மேலும் பலப்படுத்துவது மிகவும் முக்கியம். போராட்ட காலத்தில் எமது தலைவர் தனித்து ஆயுதப் போராட்டத்தை மட்டும் வழிநடத்தவில்லை. ஆயுத வடிவம்¸ அரசியல் வடிவம் என இரண்டு முனைகளில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற ரீதியிலேயே அரசியற் செயற்பாடுகள் முன்நகர்த்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே அந்தக் கட்சியை நாங்கள் சின்னாபின்னமாக்கிவிட்டு நாம் எதைச் சாதிக்க முடியும். சரி பிழைகள் பல வந்து போகும். அவற்றினைப் பேசித்தீர்த்து நாங்கள் அக் கட்சியைப் பலப்படுத்திப் பயணிப்பதே பொருத்தமாக இருக்கும். இதனை விடுத்து வெறுமனே வியாக்கியானம் பேசிக்கொண்டிருப்பதில் நாங்கள் சாதிக்கக் கூடியது எதுவுமே இல்லை.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை முழுமையாக ஆதரித்து வடக்கு கிழக்கிலே 20 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக அர்ப்பணிப்புடன்¸ முழுமூச்சாக உழைப்பதே ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முழுமையான நிலைப்பாடாக இருக்கின்றது.

எனவே நாங்கள் தமிழ் மக்களிடம் அன்பாக வேண்டிக் கொள்வது. எதிர்த் தரப்பினரின் மாயாஜாலங்களுக்குள் சிக்கி விடாமல் எமது தலைவர் கைகாட்டி¸ புடம் போட்டு வளர்த்துவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாக மாத்திரம் தான் தமிழர்களின் எதிர்காலத்தை அடைய முடியும். எனவே எமது மக்கள் உறுதியாக¸ தெளிவாக¸ சரியாகச் சிந்தித்து வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் ஒருமித்த உணர்வோடு பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts