சட்டதிட்டங்களை மீறி நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்க இராஜதந்திரிக்கு இடமளிக்க முடியாது: தமாரா குணநாயகம்..!!

குறைந்த வளங்களுடன் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக கடும் பிரயத்தனத்துடன் செயற்படும் இலங்கை அரசாங்கம், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தமது பிரஜைகளுக்கே நாடு திரும்ப சந்தர்ப்பமளிப்பதற்கு தயங்கும் நிலையில், சட்டதிட்டங்களை மீறி நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க இராஜதந்திரிக்கு இடமளிக்க முடியாது என ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தருணத்தில் இந்நாட்டு அரசாங்கம் வியன்னா உடன்படிக்கையின் 9 ஆவது சரத்திற்கு அமைவாக சம்பந்தப்பட்ட அதிகாரியை நாட்டிலிருந்து வௌியேற்றும் படி அமெரிக்க தூதரகத்திடம் கோர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு முடியாவிட்டால் அந்த அதிகாரி தேவையில்லை என நிராகரிக்க முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கை பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனுமொரு நாட்டில் வௌிநாட்டவர்கள் இராஜதந்திரிகளாக அனுபவத்துடன் வந்தாலும் அவர் யாராக இருந்தாலும் காரணம் கூறாமல் அவரை நிராகரிக்க இருக்கும் இயலுமை ‘Persona non grata’ எனும் அறிவிப்பிற்கு உள்ளது.

இ​தேவேளை, இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி தொடர்பான விடயத்தால், நாடு என்ற ரீதியில் கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளதாக வௌி விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் உதவி செயலாளர் ஜனநாத் கொழம்பகே பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது கூறியுள்ளார்.

குறித்த அமெரிக்கத் தூதரக அதிகாரி இலங்கை வருகை தருவதற்கு கடந்த மாதம் 26 ஆம் திகதி அனுமதி அளிக்கப்பட்டதாகவும் 27 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட திட்டங்களை அவர் அறிந்திருக்கவில்லை எனவும் அந்தப் பத்திரிகை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts