பிரதமர் -முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விசேட சந்திப்பு..!!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்திப்பில் கலந்துக்கொள்வதாக முன்னதாக அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அதனை புறக்கணிக்கவுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

அது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குறித்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த கூட்டத்தில் எந்தவிதமான அர்த்தபூர்மான உரையாடலும் இடம்பெற மாட்டாது என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கொவிட்-19 ஐ ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராக உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், குறித்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன தீர்மானித்துள்ளன.

எவ்வாறிருப்பினும், குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், விவசாயிகள், தினக்கூலி தொழிலில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஆராயவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, இன்றைய தினம் அலரிமாளிகை கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொதுமுடிவை மதித்து தாங்களும் அதில் பங்கேற்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தி;ல் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts