உள ரீதியாக பாதிக்கப்படும் கனேடியா்களை ஆற்றுப்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு..!!

கனடியா்களின் உள நலனைப் பேணவும் இணைய வழி சுகாதார சேவைகளை எளிதாக்கும் திட்டங்களுக்காகவும் 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

சமூக முடக்கலால் பாதிக்கப்பட்டுள்ள கனேடியா்களின் உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகளை புதிய தளங்களில் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்கள் இந்த நிதியின் ஊடாக முன்னெடுக்கப்படும் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குடும்பத்தினருடன் வீடியோ தொடா்பாடலில் இணைந்திருப்பதன் மூலம் ஒருவருக்கொருவா் உள ஆரோக்கியத்தைப் பேணுதல், இணைய வழி உள ஆற்றுப்படுத்தல், இணைய வழியில் உணவுகளுக்கான முன்பதிவுகைளைச் செய்தல் என்பவற்றை இலகுபடுத்தும் வகையிலும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கடந்த ஏழு வாரங்களாக சமூக முடக்கலின் கீழ் வீடுகளில் முடங்கியுள்ள கனேடியா்களில் உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தனிமையால் கடும் மன அழுத்தங்களுக்கு அவா்கள் உள்ளாகியுள்ளனா்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தொற்று நோய் காலத்தில் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள கனேடியா்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிக அளவு பதட்டமடைந்துள்ள கனேடியா்களின் தொகை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

சமூகத் தொலைவு மற்றும் பரவலான சமூக மூடல்கள் தொடர்ந்தால் இந்த சிக்கல்கள் இன்னும் மோசமடையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனா்.

இந்நிலையில் கனடாவின் உளநல ஆணையம் தொழிலாளர்களை மையப்படுத்தி இலவச இணைய வழி உள நல ஆலோசனைகளை வழங்கிவருகிறது. அனைத்து கனேடியர்கள் மத்தியிலும் உள ஆற்றுப்படுத்தல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என மருத்துவா்கள் கருத்து வெளியிட்டிருந்தனா்.

தங்கள் சமூக மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக சில பழங்குடித் தலைவர்கள் கூறியுள்ளனா்.

இந்நிலையில் சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக வான்கூவரை தளமாகக் கொண்ட அப்செல்லெரா நிறுவனத்திற்கு 175 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வழங்கவுள்ளதாக பிரதமா் ட்ரூடோ நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

இவற்றுக்கு மேலதிகமாக கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராட்டத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை சீராக வழங்குவதற்கான ஏது நிலையை தொடா்ந்து பேணுவதில் கவனம் செலுத்திவருவதாக பிரதமா் ட்ரூடோ அறிவித்துள்ளாா்.

கொரோனாவுக்கு பயனுள்ள சிகிச்சைகள் கிடைக்கும் வரை அல்லது ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை நாங்கள் தொற்று நோயைச் சமாளிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். முக கவசங்கள் முதல் வென்டிலேட்டர்கள் வரை அனைத்தை தேவையான அளவுக்கு விநியோகிக்கத் தயாராக் இருக்க வேண்டும் எனவும் பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார்.

Related posts