ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலிய அணியில் இன்னும் மூவருக்கு வாய்ப்பு..

எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலிய அணிக்கு, இன்னும் இரண்டு அல்லது மூன்று இடங்களுக்கான வீரர்களை தெரிவுசெய்ய வேண்டியுள்ளது என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் ட்ரெவர் ஹோன்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்க தொடரை நடத்துவதில் சிக்கல் நிலை எழுந்துள்ளது.

எனினும், இத்தொடரில் விளையாடவுள்ள அவுஸ்ரேலிய அணி கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக ட்ரெவர் ஹோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அணியை தெரிவுசெய்யும் போது, இறுதி இரண்டு இடங்களை தெரிவுசெய்வதுதான் கடினமான விடயம்.

குறிப்பாக கடந்த 12 மாதங்களாக தெரிவுசெய்யப்பட்டு விளையாடிய ரி-20 அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றமை அணியின் முன்னேற்றத்தை காட்டுகின்றது.

நாம், இப்போது அணியை தெரிவுசெய்வதனை நெருங்கியுள்ளோம். இதனை சரிசெய்தால் அணியை உடனடியாக அறிவிக்க முடியும்’ என கூறினார்.

ஐந்து முறை 50 ஓவர்கள் உலகக்கிண்ணத்தை ஏந்தியுள்ள அவுஸ்ரேலியாவுக்கு, இதுவரை ரி-20 உலகக்கிண்ணம் எட்டாக் கனியாகவே உள்ளது.

ஆகையால், இம்முறை சொந்த மண்ணில் நடைபெறும் ரி-20 உலகக்கிண்ணத்தை வென்றே ஆகவேண்டுமென்பதில் அவுஸ்ரேலியா உறுதியாகவுள்ளது.

அத்துடன் அவுஸ்ரேலியா அணி இறுதியாக விளையாடிய 10 ரி-20 போட்டிகளில் 9இல் வெற்றிபெற்று, முதல்முறையாக ரி-20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related posts