சிறுபான்மை மதங்களை ஒதுக்குவதை தவிர்க்கவும்- உலக நாடுகளிடம் கோரிக்கை..!!


கொரோனா வைரஸ் பரவலோடு மதங்களை தொடர்புபடுத்தி பேசுவதையும் அவர்களை சிறுபான்மை மதத்தினரை ஒதுக்குவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு  என அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதர் ஷாம் பிரவுன்பேக் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மத ரீதியான குழுக்கள் தங்களுக்கு இடையே சமூக விலகலைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமானதாகும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அதேசமயம் உலகம் முழுவதும் மத ரீதியான குற்றவாளிகள் சிறையில் இருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக ஈரான், சீனா போன்ற நாடுகள் அந்தக் குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வொஷிங்ரனில் ஷாம் பிரவுன் பேக் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், “மத ரீதியான குழுக்கள் தங்களுக்கு இடையே சமூக விலகலைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவுவதற்கும், மதத்தையும் தொடர்புபடுத்தி பேசும் நாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக பல இடங்களில் இதுபோன்று நடக்கிறது. இதுபோன்ற கருத்துகளுக்கு அரசே ஆதரவு அளிப்பது தவறானது.

உடனடியாக இதுபோன்ற பேச்சுகளுக்கு அரசுகள் முற்றுப்புள்ளி வைத்து, கொரோனா வைரஸ் இதுபோன்ற வழிகளில் பரவாது, மதத்துக்கும் கொரோனா வைரஸுக்கும் தொடர்பில்லை என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது, உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது என்று நமக்குத் தெரியும். இது மதச் சிறுபான்மை மக்கள் மூலம் பரவவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற பேச்சுகள், சம்பவங்கள் உலகில் பல இடங்களில் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்கும், பேச்சுக்களுக்கும் அரசு அனுமதியளித்தால் அந்த நாடு உலகத்தால் பின்னோக்கித் தள்ளப்படும்.

இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையுடன் இணைந்து பணியாற்றி, தேவையான உதவிகளைப் பெற வேண்டும். பல நாடுகளில் இதுபோன்ற கடினமான நேரங்களில் சிறுபான்மை மக்களுக்குப் பொது மருத்துவம் தேவையான அளவுக்கு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுகிறார்கள்.

அனைத்துச் சமூகத்தினரையும் ஒரே மாதிரியாக நடத்தி, அவர்களுக்கு மருத்துவ வசதிகளையும், வளங்களையும் வழங்க வேண்டும்” என வலியுறுத்துகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

Related posts