கொரோனாவை கருத்தில் கொண்டு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை..!!

கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுவிக்கப்படக்கூடிய கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து ஜனாதிபதிக்கும், துறைசார் முக்கியஸ்த்தர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 50 சதவீதமான கைதிகள், விளக்கமறியல் கைதிகளாகவும், பிணைவழங்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

அத்துடன் பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்ய முடியாமை, தண்டப்பணத்தை செலுத்த முடியாமை போன்ற காரணங்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களும் இருக்கின்றனர்.

இவ்வாறு சிறையில் அதிக நெருக்கடி நிலவுகின்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் அங்கு அதிகம் இருக்கிறது.

சிறைச்சாலைக்குள் நிலவுகின்ற வசதிக்குறைப்பாடுகளால், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளால்  இடைவெளி, கைகழுவுதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றவும் முடியாத நிலைமை உள்ளது.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களை துரித நீதிவிசாரணை, நிர்வாக நடவடிக்கைகள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு போன்ற பொறிமுறைகளின் அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், அடையாளம் கொள்கை ஆய்வு மையம், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்டவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

Related posts