வட்டிக்கு கொடுத்து சம்பாதித்தேன்: ரஜினி

ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005ம் ஆண்டு வரையிலான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ததில் குறைபாடு இருப்பதாக, மொத்தம் ரூ.66.22 லட்சம் அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து ரஜினி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரத்த தீர்ப்பாயம், எந்த ஆதாரமும், விசாரணையும் இல்லாமல் அபராதம் விதித்தகாக கூறி, ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரி ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கடந்த ஜன.,28 ல் வழக்கை திரும்பப் பெறுவதாக வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுவாமிநாதன் தெரிவித்தார். இதனால், ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தான் வட்டிக்கு பணம் கொடுத்து நஷ்டமானதாக கூறியதாக தகவல் தெரியவந்துள்ளது. அதில், 2002-03 காலக்கட்டத்தில் ரூ.2.63 கோடி கடன் வழங்கியதால் அதன்மூலம் ரூ.1.45 லட்சம் வட்டியாக கிடைத்தது. இதற்கு முறையாக வரி செலுத்தியதாகவும், 2004-05ம் ஆண்டில் ரூ.1.71 கோடி கடன் வழங்கியதில் பணம் வசூலாகாததால் ரூ.33.93 லட்சம் நஷ்டம் அடைந்ததாக விளக்கமளித்துள்ளார்.

மேலும், பொருளை அடமானம் வைத்து பணம் பெறுவதை மட்டுமே வட்டித்தொழில் என நினைத்திருந்தேன் எனவும், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கடன் வழங்கியதாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகவும் வியாபாரமாகவும் செய்யவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதால், ரஜினி மீதான வழக்கை திரும்ப பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts