இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருக்கக் கூடாது: சித்தார்த்தன்

புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசாங்கத்தில் நாம் எதிர்பார்த்ததை போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தேர்தலை மையப்படுத்தியோ அல்லது தேர்தலிற்கு பின்னரோ மாற்றங்கள் ஏற்படலாம். ஜனாதிபதி கோட்டாவை பொறுத்தவரை மாற்றங்கள் ஏற்படும் என்று கருதாவிட்டாலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம்.

தற்போது குற்றச்செயல்கள் கூடுதலாக இருக்கின்றன. எனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்ற அபிப்பிராயம் சில மக்கள் மத்தியிலே இருக்கிறது.

பொதுவாக இது ஒரு இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும். மக்களின் பாதுகாப்பு என்பது முக்கிய விடயம். அது பொலிஸ் துறையின் கண்காணிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என மேலும் தெரிவித்தார்.

Related posts