நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியா முயற்சி!

நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மயில்சாமி அண்ணாதுரை மேலும் கூறியுள்ளதாவது, “புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரமும் காப்புரிமையும் பெற்றுத்தர தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுள் காலம் முடிவதற்குள் சந்திரயான் 3யை அனுப்ப வேண்டும்.அதற்கான ஆராய்ச்சிகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது.

இந்தியா நிலவில் ஆராய்ச்சி செய்வது உலக நாடுகளிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் இஸ்ரோவும் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கு அங்குள்ள மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

விண்வெளியிலுள்ள சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. அதனுடைய ஆயுட்காலம் குறைவு என்பதால் நிலவிலேயே ஒரு சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கு உலக நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது. நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமையும் போது, இந்தியாவும் அதில் பங்குகொள்ளும். அதன் முதல்கட்டமாகதான் ககன்யான் அனுப்பப்பட உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts