பாகிஸ்தானுக்கு சாதனை படைக்க சென்ற தமிழ் குத்துச்சண்டை வீரர்கள் காயம்

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட இரு இலங்கை வீரர்கள் போட்டியின் போது காயமடைந்துள்ளனர்.

இலங்கையை பிரதிபலித்து வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ரி.நாகராஜா (வயது 18), எஸ்.சிறிதர்சன் (வயது 18) ஆகியோரே இவ்வாறு குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட நிலையில் காயமடைந்துள்ளனர்.

வட மாகாணத்தை பிரதிபலித்து வவுனியாவிலிருந்து ஏழு வீரர்கள் தேசிய கிக் பொக்சிங் குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பாகிஸ்தானில் கடந்த 23-01-2020 தொடக்கம் 27-01-2020 வரை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்த நிலையிலேயே, போட்டியின் போது குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் கை மற்றும் முகத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் இந்த நிலையிலேயே குறித்த இரு வீரர்களும் தொடர்ந்தும் விளையாடி இலங்கைக்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

காயமடைந்த இரண்டு வீரர்களும் சிகிச்சைகளின் பின் இன்று மாலை நாடு திரும்பவுள்ளனர்.

வட மாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் பயிற்சிகளை பெற்று தேசிய ரீதியில் தங்க பதக்கங்களை பெற்ற ஏழு வீரர்கள் குறித்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை பிரன்ஞ்சு சவாட் கிக்பொக்சிங் குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் சி.பூ.விக்ரமசிங்க தலைமையில் பாக்கிஸ்தான் சென்ற இலங்கை வீரர்கள் 11 தங்க பதக்கங்களையும், 8 வெள்ளி பதக்கங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts