வவுனியாவில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்.

வவுனியா – மடுக்கந்த தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி மடுக்கந்தையைச் சேர்ந்த சிங்கள மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியை மறித்து குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்றிருந்ததுடன், தமது பாடசாலைக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்திலேயே அங்கிருந்து செல்வோம் எனவும் கோசங்களை எழுப்பியுள்ளனர்.

இதனால் ஏ9 வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து பொலிஸார் மாற்று வழிகளினூடாக போக்குவரத்தை சீர்செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள், வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணனை ஆர்ப்பாட்ட இடத்திற்கு அழைத்து வந்து அம்மக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது தமது பாடசாலையில் 750இற்கும் அதிகமான மாணவர்கள் கற்பதாகவும், உயர் தரத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில், அவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவித்ததுடன், ஏனைய வகுப்புகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதன்போது இரண்டு வாரத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஆவன செய்வதாக தெரிவித்து வலயக்கல்விப் பணிப்பாளரினால் எழுத்து மூலமாக இரண்டு வாரத்தில் தேசிய பாடசாலைக்கான ஆசிரியர்களை நியமிப்பதாகவும் மற்றும் மாகாண பாடசாலைகளில் இருந்து தற்காலிகமாகவேனும் உயர்தர மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்களை நியமிப்பதாகவும் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்

Related posts