பொதுத் தேர்தலில் மைத்திரி.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறை ஒன்றை நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் வருகின்ற மாதங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே சுதந்திரக் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கடந்த வருடம் நவம்பர் 16ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பலவித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கொழும்பிலுள்ள சுவிட்சற்லாந்து தூதரகத்தில் பணிபுரிந்த பெண் பணியாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் இம்முறை ஜெனீவா விவகாரத்தை கையாளப் போகின்ற விடயம் குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் விடுக்கவில்லை.

இந்நிலையில் கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, ஜெனீவா விவகாரத்தை கையாளவுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளானது 30 வருடப்போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற ஒருசில சம்பவங்களை அடிப்படையாக வைத்தே முன்வைக்கப்பட்டது. வடமாகாணம் இன்று மீண்டும் இயங்குவதற்கு ஆரம்பித்துவிட்டது.

அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் மனித உரிமைகள் என்ற விடயமானது மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் மனித உரிமைகள் விடயத்தைப் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற வகையிலும் முதலாவது நாடு என்பதை முன்னிலைப்படுத்தியும், வேறு நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அடிபணியாத அரசாங்கம் என்ற ரீதியிலும் முடிவுகளை எடுக்க வேண்டும்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சிறந்த பொறிமுறை ஒன்று நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார். அவர் நடத்திவருகின்ற சமூக சேவைகள், அவரால் மேற்கொள்ளப்பட்ட தேசிய மட்டத்திலான அபிவிருத்திகள், முயற்சிகள், போராட்டங்கள் மற்றும் அவர் தனது கொள்கைக்கு ஒத்துழைக்காத பிரதமரை நீக்கி அப்போதைய எதிர்கட்சித் தலைவரை பிரதமராக்கும் வகையில் தைரியமான தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

அவற்றுக்கு பெறுமதி கொடுக்காவிட்டால் வரலாற்றில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவார்கள். கட்சித்தலைவரை கொலை செய்தார்கள். கட்சித் தலைவிக்கு எதிராக சூழ்ச்சி செய்து சகோதரர்களே வேறு கட்சிகளை தொடங்கினார்கள்.

இவற்றையெல்லாம் நாம் எதிர்நோக்கியிருந்தோம். ஆனாலும் தற்போது சுதந்திரக் கட்சி எதிர்கொண்டுவரும் பரிசோதனைகளை வெற்றிகொள்ளும். சின்னம் என்று வருகையில் பொதுவான சின்னம் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.

கூட்டணியை அமைத்து அதனைப் பாதுகாப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. ஆகவே பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுவான சின்னம் குறித்து பேச்சினை சுதந்திரக் கட்சி நடத்தும். இல்லாவிட்டால் மாற்று வழி குறித்தும் சிந்திக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts