எல்லா செல்போன்களுக்கும் ஒரே சார்ஜர்… முன்னெடுக்கும் ஐரோப்பிய யூனியன்… எதிர்க்கும் ஆப்பிள்

உலகம் முழுமைக்கும் ஒரே விதமான சார்ஜரை பயன்படுத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் அமைப்பின் கோரிக்கைக்கு ஆப்பிள் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து செல்போன்களுக்கும் ஒரே சார்ஜர் முயற்சியை ஐரோப்பிய யூனியன் முன்னெடுத்திருப்பது ஏன்?

செல்போன் சார்ஜர் தரும்படி அலுவலகங்களில் சகாக்களிடம் நாள்தோறும் கெஞ்சும் பலரை பார்த்திருப்போம். சார்ஜர்களுக்கு என்றுமே எங்குமே டிமாண்ட்தான். பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களிலும் கூட…”கொஞ்ச நேரம் போட்டுட்டு தர்றேன்” என வாங்கிவிட்டு அது பொருந்தவில்லை எனத் தெரிந்ததும் வருத்தத்துடன் உரியவரிடம் திருப்பித் தருவோரையும் பார்க்கிறோம். காரணம்….செல்போன் சார்ஜர்கள் வெவ்வேறானவை.

ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் அதற்கான சார்ஜர்களையும் துணை உபகரணங்களையும் பிரத்யேகமாக தயாரித்து விற்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சார்ஜர்கள் மற்ற செல்போன்களுக்கு பயன்படுத்தவே முடியாது. அதனால் உலகில் பயன்பாடற்ற சார்ஜர்கள் மலை போல் குவிந்துள்ளன, போலி சார்ஜர்களும் மறுபுறம் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

இந்தியாவில் மட்டுமே நூறு கோடிக்கும் அதிகமான சார்ஜர்கள் வீடுகளில் புழக்கத்திலும், குப்பைமேடுகளில் மக்காமலும் கிடக்கின்றன. உலகம் முழுவதும் இதுபோல் பல நூறு கோடி சார்ஜர்கள் மற்றும் இதர துணை உபகரணங்கள் பல ஆயிரம் டன் பிளாஸ்டிக் மலைகளாக குவிந்துள்ளன.

இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறிவருவதால் அதை குறைக்கும் வகையில் அனைத்து செல்போன் நிறுவனங்களும் இனி செல்போன்கள், டேப்லெட்கள், இ-ரீடர்களுக்கு ஒரேவிதமான சார்ஜர்களை தயாரிக்கவேண்டும் என்றும் இதனால் சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படும் என்றும் ஐரோப்பிய யூனியன் அண்மையில் வலியுறுத்தியுள்ளது.இது வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் என்றபோதிலும் இதற்கு உடன்படமாட்டேன் எனக் கூறி ஆப்பிள் நிறுவனம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

அனைத்து செல்போன்களுக்கான சார்ஜர்களை தயாரிக்கவேண்டும் என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு தடைக்கல் போல் ஆகிவிடும் என்றும் அத்தகைய மாற்றத்துக்கு 11 ஆயிரத்து 786 கோடி செலவிடவேண்டியிருக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ஒரேவிதமான செல்போன்களை பயன்படுத்தினால் 216 கோடி ரூபாய் அளவிற்கே சுற்றுச்சூழல் பலன்கள் கிடைக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் முடிவுக்காக ஐரோப்பிய யூனியன் காத்திருக்கிறது.

Related posts