‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா?

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

ஆனாலும் யூகமாக பல்வேறு தகவல்கள் வருகின்றன. கதாநாயகியாக யாமி கவுதம் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் வலிமை படத்தில் பிரசன்னா நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. வலிமையில் நடிக்கிறீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை வைத்து அவர் நடிப்பது உறுதி என்று பேச தொடங்கி உள்ளனர். வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. வலிமை படத்துக்கு தேர்வான நடிகர், நடிகைகளிடம் படம் பற்றிய விவரங்களை வெளியிட கூடாது என்று தடை விதித்துள்ளதால் மவுனம் காக்கிறார்கள். படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜித்துக்கு பிடித்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts