ரோகித் – விராட் அபார ஆட்டம்: தொடரை கைப்பற்றியது இந்திய அணி

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 286 ரன்களை குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஸ்டீவன் ஸ்மித் 132 பந்துகளில் 131 ரன்களை குவித்தார்.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, முகமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தாலும், எதிர்முனையில் விளையாடிய ரோகித்சர்மா – விராட்கோஹ்லியுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைத்தார்.

இந்த ஜோடி இணைந்து 2வது விக்கெட்டிற்கு 139 ரன்களை குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 119 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து விராட் – ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் 89 ரன்கள் எடுத்திருந்த போது விராட்கோஹ்லி விக்கெட்டை பறிகொடுத்தார்.

13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த போது, ஸ்ரேயாஸ் ஐயர் (44) – மனீஷ் பாண்டே (8) இணைத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதன்மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Related posts