நடிகர் ரஜினி பேச்சு எச்.ராஜா ஆதரவு

ஈ.வெ.ரா., குறித்து, நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, சட்டரீதியாக, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது,” என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று காலை தரிசனம் செய்த பின், அவர் கூறியதாவது:காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்ற, சந்தேகப்படும்படியான நபர்கள், புகைப்படம் எடுத்தது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவிலில், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுத்துச் சென்ற, சந்தேகத்துகுரிய நபர்களை கைது செய்து, விசாரிக்க வேண்டும்.

சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொலைக்கும், பெங்களூரு மற்றும் டில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. ஹிந்து கடவுளை ஈ.வே.ரா., இழிவுபடுத்தியவர். அவரின், ஹிந்து விரோத நடவடிக்கையில் ஒரு சிலவற்றைத்தான், ரஜினி கூறியிருக்கிறார். இதனால், ரஜினி மீது சட்டரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டில் கொடுமை படுத்தப்பட்டு, அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில், யாருக்கு, என்ன பாதிப்பு இருக்கிறது. அல் உம்மா, சிமி போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தில், அல் உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் கூட்டு சேர்ந்து, சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு, எச்.ராஜா கூறினார்.

Related posts