உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி – ரணில் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு

மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக  குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  ஆகியோர் சார்பில், இனி மேல் சட்ட மா அதிபர் ஆஜராகப் போவதில்லை என  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்சானா ஜெமீல்  இன்று உயர் நீதிமன்றுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கர்வாத தாக்குதல்களை  தடுக்கத் தவரியதாகக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான  விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட போதே, சட்ட மா அதிபரின் இந்த தீர்மானத்தை மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்சானா ஜெமீல் அறிவித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்சான ஜெமீலின் இந்த அரிவிப்பை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் சட்டத்தணிகள் இருவர் மன்றில் ஆஜராகினர்.

இந் நிலையில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலும் அடிப்படை ஆட்சேபங்கள் இருப்பின், முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன  மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தரப்புக்கு கால அவகாசம் வழங்க  உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. 

மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்கள் இருப்பின் அவற்றை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதிக்குள்  எழுத்து மூலம் சமர்ப்பிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், எதிர்வரும் மார்ச் 12,13,14 ஆம் திகதிகளில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

Related posts