இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

‘பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் இனி இளவரசர் – இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்; மக்கள் வரிப் பணத்தையும் அவர்கள் பெற மாட்டார்கள்’ என ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ் – மறைந்த டயானா தம்பதிக்கு வில்லியம்ஸ், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகனான ஹாரி 35 அமெரிக்காவைச் சேர்ந்தவரும் முன்னாள் நடிகையுமான மேகன் 38 என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக ஹாரியும் அவரது மனைவி மேகனும் அறிவித்தனர்.சாதாரண வாழ்க்கை வாழப் போவதாகவும் சுயமாக உழைத்து சொந்தக்காலில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஹாரியை சமாதானப்படுத்த ராணி எலிசபெத் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹாரியும் அவரது மனைவியும் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேற ராணி எலிசபெத் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இது சர்வதேச நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த இரு ஆண்டுகளாகவே ஹாரியும் மேகனும் எதிர்கொண்ட சவால்களை உணர்கிறேன். சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

கடந்த சில நாட்களாகவே இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் விவாதங்கள் நடந்தன. ஆனாலும் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதில் இருவரும் உறுதியாக இருந்தனர். அவர்களது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.மேகன் திருமணமான சில மாதங்களிலேயே அரச குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராக விரைவாக மாறியதை பெருமையாக நினைக்கிறேன்.ஹாரியும் அவரது மனைவி மேகனும் இனி பெருமைக்குரிய இளவரசர் இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்.

அதேபோல் பொதுமக்கள் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள். விண்ட்ஸ்டர் எஸ்டேட்டில் தங்கள் வீட்டை சீரமைப்பதற்காக வரிப் பணத்திலிருந்து 22 கோடி ரூபாயை இருவரும் பெற்றிருந்தனர்; அதையும் அவர்கள் திரும்ப தந்து விடுவர். அரச குடும்பத்துக்கான பணிகள் எதிலும் இருவரும் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாரியின் தாயான மறைந்த டயானா இளவரசர் சார்லசிடமிருந்து 1996ல் விவகாரத்து பெற்றார். இதையடுத்து அவரிடமிருந்து இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

Related posts