அசுர வேகம்? கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்த இலங்கை வீரர்!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி-யின் 19 வயதுக்கு உட்பட்டேருக்கான உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் அசுர வேகத்தில் பந்து வீசியுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மிரண்டுபோயுள்ளனர்.

ஜனவரி 19ம் திகதி புளூம்ஃபோண்டெய்னில் உள்ள மைதானத்தில் நடந்து போட்டியில் சாம்பியன் இந்திய அணியும் இலங்கை அணியும் தங்களது முதல் போட்டியில் மோதின.

இதில், இலங்கை அணியை 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.

எனினும், இப்போட்டியில் மலிங்கா போல பந்து வீசி பிரபலமான இலங்கையின் இளம் வீரர் மத்தீஷா பதிரானா, 175 கி.மீற்றர் வேகத்தில் பந்து வீசியுள்ளார். இது கிரிக்கெட்டில் மிக வேகமாக வீசிய பந்தாக கூறப்படுகிறது.

இந்திய இன்னிங்ஸின் 4 வது ஓவரில், வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானா யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அகலப்பந்தாக வீசினார்.

இது 175 கி.மீ (108 மைல்) வேகத்தில் பதிவு செய்யப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என அனைத்து வடிவங்களிலும் இதுவரை வீசப்பட்ட மிக வேகமான பந்தாக இது பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்னர், சர்வதேச கிரிக்கெட்டில் மிக வேகமாக பதிவு செய்யப்பட்ட பந்து வீச்சை முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் 2003 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 161.3 கி.மீ (100 மைல்) வேகத்தில் வீசி வரலாற்று சாதனை படைத்திருந்தார்.

தற்போது, ஷோயிப் அக்தரின் சாதனை முறியடிக்கும் வகையில் இவர் பந்து வீசியுள்ளார். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

குறித்த போட்டியின் ஒளிபரப்பின் போது, தொலைக்காட்சியில் குறித்த பந்தின் வேகம் 175 கி.மீற்றர் வேகம் என்று காண்பிக்கப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஐசிசியிடம் இது உண்மையா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Related posts