அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் பிரதமர் தெரிவித்துள்ள விடயம்

அரசியல் கைதிகளில் எத்தனை பேர் என்ன குற்றங்களை செய்தனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும், தமிழ் ஊடக பிரதானிகளுக்குமான சந்திப்பொன்று இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உங்களது கட்சியில் இஸ்லாமிய அரசியல்வாதிகள் இல்லை என்பதற்கான காரணம் என்ன என வினவப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கையில், மக்கள் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து எங்கள் கட்சியின் மூலமாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை என்பதே காரணம்.
இனிவரும் காலங்களில் மக்கள் சரியான தலைவர்களை தேர்ந்தெடுத்தால் நாமும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின் அரசியல் கைதிகளை விடுவிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன என்று வினவப்பட்டமைக்கு,
எத்தனை பேர் என்ன குற்றங்களை செய்தனர் என்ற விபரங்களை சேகரித்து வருகின்றோம்.
அதன் பின் குற்றத்தன்மைக்கு ஏற்ப விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஏன் இந்த அரசாங்கம் நிறுத்தியது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தரும் போது,
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்படி சொல்லப்படவில்லை. அதே போன்று ஒரு சில நாடுகளில் தேசிய கீதம் அந்த நாட்டு பிரதான மொழியில் மட்டும் பாடப்படுகிறது.
வேறு சில நாடுகளில் பல்வேறு மொழிகளில் பாடப்படுகின்றன. என்ற போதும் அது ஒரே விடயத்தை தான் கூறுகிறது.
நான் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஏதாவது நிகழ்விற்காக சென்றால் நான் ஒருவர் சிங்கள மொழி தெரிந்தவர் என்பதற்காக சிங்கள மொழியில் தேசிய கீதம் பாட வேண்டும் என கேட்க முடியாது.
அங்கு வருகை தந்திருக்கும் மக்களில் பெரும்பான்மையினர் எம்மொழி மக்களோ அந்த மொழியில் தான் தேசிய கீதம் பாட வேண்டும்.
இது ஒரு பெரிய வாழ்க்கை பிரச்சினை கிடையாது. ஊடகவியலாளர்களாகிய நீங்களே இதனை புரிந்து கொள்ளாவிட்டால் மக்களுக்கு எப்படி புரியும்?
முன்னைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய கீதத்தை தமிழில் பாடியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. அதையும் வாக்குகள் சேகரிப்பதற்காகவே செய்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts